என்னமோ ஏதோ... என்னம் திரளுது கணவில்... வண்ணம் திரளுது நிணைவில்... கண்கள் இருளுது நனவில்......
மனது இன்னும் பாடிக்கொண்டே இருக்கிறது இந்த வரிகளை... படம் பார்த்து திரும்பி வந்து கிட்டத்தட்ட 7 மணி நேரம் ஆகப்போகிறது. இன்னும் "கோ"-வின் சாரல் நின்றபாடில்லை!
நான் ஓகூஸ் நகரில் வாழ்கிறேன். ஹோர்ன்ஸ்லெட் நகரத்தில் உள்ள ஹோர்ன்ஸ்லெட் பியோ திரையரங்கம், கிட்டத்தட்ட 25 கீ.மி இங்கிருந்து. "கோ" படத்தை அங்கு தான் திரையிட்டார்கள். டென்மார்க்கில் தமிழர்கள் மற்ற நாடுகளைவிட குறைவு என்பதால், எந்த படம் வந்தாலும் ஒரு நாள், ஒரே காட்சி தான். போனா-போனதுதான், விட்டா-விட்டதுதான். இன்று இந்த படத்தை பார்ப்பேன் என்று தெரிந்ததால் இணையத்தில் இருந்த "தியேட்டர் பிரிண்டை" பார்க்கவில்லை. ஒரு சில பாடல்கள் "அடச்சே... இந்த நேரத்துல பாட்டா...??" என்று எரிச்சலூட்டியது தவிர ஒரளவுக்கு படம் விருவிருப்பாகத்தான் போனது.
திரைப்படங்களை விமர்சனம் செய்யும் அளவுக்கு எனக்கு திரை அறிவு போதாது. ஆனா படம் முடிந்தபிறகு ஒரு விஷயம் யோசிக்கத்தோணுச்சு. அரசியல்/அதிகாரம் இதுக்கு நல்லவர்கள்/இளைஞர்கள் வரனும் - இது ஒரு புதிய கரு அல்ல. இந்த கதைக்கருவை சுமந்து நம்ம திரைகள்ல நிரைய படங்கள் வந்திருக்கு. அரசியல் மற்றும் அதிகாரம் நல்லவங்க கைக்கு போச்சுன்னா எல்லாம் சரியாகிடும். ஊழல் இருக்காது, தப்பு நடக்காது, மக்கள் செழிப்பா இருப்பாங்க அப்படின்னு ஒரு தப்பான நம்பிக்கை நம்மகிட்ட இருக்கு. ஆனா என்னை பொருத்தவரையில், "ஜனநாயகம்" என்று சொல்லப்படுகிற "மக்களாட்சியில்" இது சாத்தியமே இல்லை.
பெறும்பான்மை மக்கள் பேராசை பிடித்தவர்களாகவும், பொருப்பற்றவர்களாகவும் இருக்கும்போது அவர்களிலிருந்து வரும் தலைவன் மட்டும் எப்படி நல்லவனாக இருக்க முடியும். மக்களாட்சியை பொருத்தவரை, ஒரு திருடர் கூட்டம் இருக்குமென்றால், அதில் கைதேர்ந்த திருடன்தான்அந்த கூட்டத்துக்கு தலைவனாக முடியும். திருடுவது தவறு என்று சித்தாந்தம் உள்ளவனால் அங்கு வர முடியாது. அப்படியே வந்தாலும், அவனை அந்த கூட்டம் ஏற்றுக்கொள்ளாது. அவன் தலைவனாக தொடரவேண்டுமென்றால் அவன் திருடனாக மாறியே ஆகவேண்டும். அதே போல்தான் இங்கும். ஒருவேளை ஒரு நல்ல மனிதன் அல்லது நல்ல மனிதர்கள் ஆட்சிக்கு/அதிகாரத்துக்கு வந்தால், அவனால் அந்த மக்களை சோம்பேறியாக வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால், மக்களை திருத்துகிறேன் பேர்வழி என்று எதையாவத் செய்து வைத்தால், அடுத்தமுறை அந்த மனிதனால் ஆட்சிக்கு வரமுடியாது. இதுதான் இங்கு நிதர்சனம்.
மக்கள் வழியே மகேசன் வழி!
மக்களாட்சியில், மகேசன் வழிக்கு என்றுமே மக்களை கொண்டுவரமுடியாது. அதுவும் இந்த 5 ஆண்டு தேர்தல் முறையில் நிச்சயம் முடியாது. மக்களின் மனநிலையில், தனிமனித/பொது ஒழுக்கத்தில் மாற்றம் ஏற்படாமல் அரசியல் மாற்றமோ, ஆட்சி மாற்றமோ, போராட்டமோ எதுவுமே வெற்றி பெறாது என்பது என்னுடைய கருத்து.
விடுதலை பெற்று 64 ஆண்டுகளை கடந்துவிட்டோம், ஆனால் என்ன செய்தோம்? வறுமையை ஒழித்தோமா, இன (சாதி) வெறியை ஒழித்தோமா, பெறும்பான்மை மக்களின் வாழ்வியலை உயர்த்தினோமா, இல்லை என்னதான் செய்தோம். மேற்கு நாடுகளுக்கு சாமரம் வீசி நம் மக்களை நியாய அநியாயங்கள் தெரியாத பேராசை பிடித்த, இலவசங்களை எதிர்நோக்குகின்ற, ஓட்டுக்கு காசுவாங்கும் கூட்டங்களாக, பொறுப்பற்றவர்களாகத்தான் ஆக்கியிருக்கிறோம்.
சரி, அதற்காக எதுவுமே நடக்கவில்லை என்று பொத்தாம்பொதுவாக நான் சொல்லவில்லை. நடந்தது எதுவுமே பத்தாது என்பதுதான் என் வாதம். மக்களாட்சி என்ற கட்டமைப்பில் ஓட்டு அரசியலை நம்பி எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்று தான் சொல்ல வருகிறேன். நமக்கு பக்கதிலேயே இருக்கும், நம்மைவிட மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு சீனா. அங்கே ஜனநாயகம் கிடையாது, கம்யுனிசம் தான். 1980களில் நம்மைவிட அதிக வருமை இருந்த நாடு. இரண்டு நாடுகளும் அதை ஒழிப்பதில் எவ்வளவு வெற்றி பெற்றனர் என்று கீழுள்ள காணொளியில் பாருங்கள். அதில் சிகப்புப்பந்து சீனா, நீலப்பந்து இந்தியா (நன்றி http://www.gapminder.org/).
அதற்காக நான் கம்யுனிசத்துக்கு வக்காலத்து வாங்கவும் இல்லை. எந்த கொள்கையாக இருந்தாலும் பெறும்பான்மை மக்களின் புரிந்துணர்வு இல்லாமல் அதை நடைமுறை படுத்த முடியாது என்பதுதான் என் கருத்து. மாற்றம் என்பது மக்களிடமிருந்து ஆரம்பிக்கவேண்டிய ஒன்று, சமுதாய மாற்றாமாக பிறக்கவேண்டிய ஒன்று. அது ஓட்டு அரசியலினால் சாத்தியம் இல்லை. ஒரு சில நல்ல மனிதர்கள் எப்படியாவது ஆட்சிக்கு வந்தால் எல்லாம் மாறும் என்பது திரைப்பட கதைக்கருவுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கு. "கெட்ட ராஜாவ அழிச்சுட்டு, நல்ல ராஜா ஆட்சிக்கு வந்தாராம்... அப்பறம் மக்களெள்ளாம் சந்தோஷமா வாழ்ந்தாங்களாம்..." என்று சிறு பிள்ளைக்கு கதைக்கு வேண்டுமானால் சொல்லலாம் நடைமுறையில் சாத்தியமில்லை. ஓட்டு போடும் மக்களுக்கு இந்த நல்ல மனிதர்கள் தேவைப்படமாட்டார்கள்.
ஒரு நல்ல உதாறனம், இன்றைய தி.மு.கழகமும் அதன் தற்போதைய நிலையும். சாதியை ஒழிக்க போராடிய சமூக சீர்திருத்த இயக்கம், தி.க-விலிருந்து திமுக அட்சி அதிகாரம் வேண்டி ஓட்டு அரசியலுக்கு வந்தது. இன்றைக்கு நிலை என்ன சாதியை ஒழிக்கப்புறப்பட்ட இந்த மனிதர்களுக்கு இன்று சாதி இல்லாமல் அரசியலே இல்லை.. எந்த அரசியல் கட்சியும் இன்று சாதி சாயம் பூசாமல் அரசியலில் நிற்க முடியாது, ஓட்டு வாங்க முடியாது. சாதிப் பெயர் சொல்வது அவமானம் என்ற ஒரு கருத்தோட்டம் பல ஆண்டுகள் பாடுபட்டு தமிழகத்தில் விதைக்கப்பட்டது. ஆனால் இன்று திரும்பவும் பெயருக்குப்பின்னால் சாதிப்பெயர் போட்டுக்கொண்டால் தவரில்லை என்ற கண்ணோட்டம் எட்டிப்பார்க்கிறது.
விடுதலை பெற்ற இந்தியாவில் தமிழகத்தில் பெரியாரை அமைச்சரவை அமைக்கச்சொல்லி ராஜாஜி கேட்டபோது பெரியார் சொன்னாராம், நான் மக்களை திட்டுபவன், சமுதாயத்தொண்டு என்ற பணியில் அவர்களுடைய வெறுப்பை சம்பாதிப்பவன் நான் ஓட்டு அரசியலுக்கு வந்தால், அம்மக்களை சந்தோஷப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவேன், அதன் பின் எந்த சீர்திருத்தத்துக்கும் இடம் இருக்காது, வேண்டாம் என்று சொல்லி விலகிவந்தாராம் பெரியார். அவர் சொன்னது எத்தனை உண்மை என்று நினைத்துப்பார்க்கிறேன்.
என்னை பொறுத்தவரை, மாற்றம் என்பது தனி மனிதம் சார்ந்தது. அது பெறும்பான்மை மக்களுக்கு பரவும்போது சமூகமாற்றமாக அமையும். இந்த மாற்றம் செயலாக்கப்படும்போது அதை கொண்டு செலுத்துவோர் நல்ல தலைவர்களாக உருவெடுப்பர். நம் வீட்டுக்குப்பையை அடுத்த வீட்டு வெளியில் போடக்கூடாது என்று நினைப்பதே இன்றைய சூழ்நிலையில் பெரிய மாற்றம்தான்.
சிறு சிறு மாற்றங்களிலிருந்து தொடங்குவோம். ஒவ்வொருவரும் தொடங்குவோம்!
"கோ" படம் பாத்துட்டு வந்த தாக்கத்துல, விளையாட்டா ஒரு சின்ன பதிவு எழுதலாம் அப்படீன்னு ஆரம்பிச்சு அது கொஞ்சம் சீரியசா போய் முடிஞ்சுடுச்சு. இருந்தாலும் பரவாஇல்லை. அப்படியே மாற்றம் பற்றி உங்களுடைய கருத்தையும் சொல்லிட்டு போங்க :)
nalla karuthu. Good solution for future politicians and our generations . thank you