இந்த மனிதனை காப்பாறியிருக்கலாமோ...???

இடுகையிட்டது: வியாழன், 27 அக்டோபர், 2011 by Unknown in லேபிள்கள்: , ,
4

எப்போதும் போல தொலைபேசியில் கேட்டுக்கொண்டிருந்தேன் என் அம்மாவிடம், 'அப்பறம், வேர என்ன செய்தி அங்க லோக்கல்ல??', 'இங்க ஒன்னும் பெரிசா செய்தி இல்லடா தம்பி... ம்! சபாபதி (உண்மையான பெயர் தவிர்த்திருக்கிறேன்)  இறந்துட்டார். அதுதான் ஒரு செய்தி' என்றார்கள். என்ன ஆச்சு என்று கேட்டதற்கு, 'நேத்திக்கு நைட்டு தூக்கு போட்டுகிட்டார்டா' என்று கொஞ்சம் அலட்சியம் கலந்த தோணியில் சொன்னார்கள். 'தூக்கு போட்டுக்கிட்டாரா, என்னாச்சும்மா?' இவ்வளவு அலட்சியமாக சொல்கிறார்களே என்ற ஆச்சர்யம் வேறு எனக்கு. என் குரலில் இருந்த அதிர்ச்சியும் கணமும் அதற்குபின் அம்மாவின் குறலிலும் தொற்றிக்கொண்டது.
பிறகு எனக்கு விளக்கம்  கொடுத்துக்கொண்டிருந்தார்கள். 'என்ன, அவருக்கு சுத்தமா உடம்பு முடியல, நடக்க கூட முடியல; ஒரே குடி, குடி தான். குடிச்சு, குடிச்சே உடம்ப கெடுத்துக்கிட்டாரு; எந்த வேலைக்கும் போகமுடியல; நேத்து நைட்டு வீட்ல எல்லாம் துணி எடுக்க கடைக்கு போயிருக்காங்க. யாரும் இல்லாத நேரத்துலதான் இருக்கக்கூடாதுன்னு எதையோ யோசிச்சு தூக்கு போட்டுகிட்டாரு'.


இன்னும் என்னால் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. சபாபதி எனக்கு சொந்தமெல்லாம் இல்லை. ஆனால் அவரின் மரணம் என்னை தாக்கியதற்கு காரணம், ஏழை என்றாலும் அவரிடம் இருந்த நாயமும், நாணயமும் தான். அவருக்கு ஒரு 50-55 வயது இருக்கும். மயிலாடுதுறையில், எங்கள் வீடு இருக்கும் பகுதியில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் ஒரு சாதாரண வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர். மனைவி இறந்துவிட்டார், ஒரு குடிசையில் இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையோடும் வாழ்கிறார். அவ்வபோது எங்கள் நகரில் இருக்கும் சில வீடுகளுக்கு தோட்ட வேலைகள் அல்லது சின்ன சின்ன வேலைகள் செய்து பணம் வாங்கிக்கொண்டு செல்வார். அவருக்கு காது சரியாக கேட்காது. அதனாலேயே பலரும் அவருடன் கத்தி கத்தி பேசவேண்டி, வேலை கொடுக்க விரும்பவில்லை. ஆனால் அவர் ஒரு நல்ல உழைப்பாளி. அதற்கு மேல் எனக்கு அவர் மேல் மரியாதை வந்ததற்கு இன்னொறு காரணம் அவர் யாரிடமும் வேலை செய்யாமல் பணம் வாங்க மாட்டார். தான் செய்த வேலைக்கு அதிகம் பணம் கொடுத்தாலும் திருப்பி கொடுத்துவிடுவார். அத்தனை வருமையிலும் இத்தனை நேர்மையா என்று வியந்திருக்கிறேன். நேற்று கூட மாலை எங்கள் வீட்டுக்கு வந்து என் அம்மாவிடம் 20 ரூபாய் பணம் கேட்டிருக்கிறார். பணம் கொடுத்திருக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தால், தானாகவே குழாயில் தண்ணீர் திறந்து எங்கள் வீட்டு தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சியிருக்கிறார். ஏன் என்று கேடதற்கு. 'பணம் வாங்கிருக்கேன் இல்லம்மா, அதான் எதாவது செஞ்சுட்டுப் போறேன்' என்று சொல்லி தண்ணீர் பாய்ச்சி விட்டு போயிருக்கிறார்.

இப்படி ஒரு சக மனிதனை இழந்ததற்காக யாரும் கவலை படவில்லை. ஏன் அவரின் பிள்ளைகளே பெரிதாய் கவலைபட்டதாக தெரியவில்லை. அவருக்கு வீட்டில் மதிப்பேதும் இருந்ததில்லை. ஆனால் என்னை பொருத்தவரையில் இப்படி ஒரு மனிதனை நம் சமூகம் மதிக்கத்தவரிவிட்டது என்று தான் தோண்றுகிறது. என்னுடைய அம்மா சொன்னது முழுக்க முழுக்க உண்மை. குடி - குடித்து குடித்தே உடம்பை கெடுத்துக்கொண்டார். அதனால், தான் யாருக்கும் லாபமில்லை என்ற மன அழுத்தத்தில் தற்கொலையும் செய்துகொண்டார். ஆனால் இந்த மனிதனுக்குள் மவுனமாக ஒரு போராட்டம் நடந்துகொண்டிருந்ததும், அதற்கு யாரும் துணையில்லை என்பதும், அதன் காரணத்தால்தான் இந்த மரணம் என்பதையும் யோசித்து பார்ப்பதற்குக்கூட யாருக்கும் அவகாசமில்லை. தினமும் போதையில் தல்லாடும் ஒருவரை பார்ப்பவர்களுக்கு, இதெல்லாம் தோண்றவும் நியாயமில்லை. 

என்ன அந்த போராட்டம்? ஏற்கனவே சொன்னதுபோல், இவர் மதுவுக்கு அடிமை தான். ஆனால், என்ன சூழ்நிலை இவரை மதுவுக்கு அடிமையாக்கியிருக்கக்கூடும் என்பதை, இவரின் இன்னொரு முகம் தெரிய காரணமாக இருந்த ஒரு நிகழ்வை சொன்னால் புரியும் என்று நினைக்கிறேன். சென்ற ஆண்டு என்று நினைக்கிறேன், நான் ஒரு முறை ஊருக்கு போயிருந்த போது, சபாபதியை மருத்துவரிடம் அழைத்துப்போய் அவருக்கு காது கேட்க ஒரு இயந்திரம் வாங்கிக் கொடுத்தோம். அவர் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க முடிந்தது. அதன்பின் அந்த ஒரு இயந்திரம் தான் அவருக்குள் இருக்கும் இன்னொறு மனிதனையும், அவன் வாழ்க்கையை வாழவேண்டும் என்ற விருப்பத்தையும் அடையாளம் காட்டியது. நான் டென்மார்க் திரும்ப வந்த பிறகு ஓரிரண்டு வாரங்கள் கழித்து எனக்கு தெரியவந்த செய்திகள்: சபாபதிக்கு இப்போது நிறைய வேலைகள் கிடைக்கிறது; நிறைய வேலைகள் செய்கிறார்;  கொஞ்சம் பணம் கிடைக்கிறது; முக்கியமாக, குடிப்பதை நிறுத்திவிட்டார்; அதுமட்டுமல்லாமல், கிடைக்கும் பணத்தை என் அம்மாவிடம் வந்து கொடுத்து, 'நான் வெச்சுறுந்தா செலவு பன்னிடுவேன், நீங்க சேத்து வெச்சுறுங்க, வேனும்கிறப்ப வாங்கிக்கறேன்' என்று  சேர்த்து வைக்க சொல்லியிருக்கிறார். அந்த மனிதனிடம் இருந்த ஒரு குறை எந்த அளவுக்கு அவன் வாழ்க்கையை பாதித்திருக்கிறது என்று புரிந்துகொண்டேன். நிரம்ப சந்தோஷப்பட்டேன். ஒருமுறை ஸ்கைப்பில் அம்மா, அப்பாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவரும் வந்து கணினி திரையில் என்னுடைய படத்தையும் அவர் படத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே ‘இப்ப நல்லா கக்குது தம்பி, இப்ப நல்லா கேக்குது’ என்று விரிந்த கண்களோடு பேசிக்கொண்டிருந்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

ஆனால், அதிககாலம் அந்த சந்தோஷங்கள் நிலைக்கவில்லை. கொஞ்ச நாளையிலேயே சபாபதி திரும்பவும் குடிக்க ஆரம்பித்தார். பின் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. மாற்றம் என்பது மனதில் வருவது என்பதே ஒரு போராட்டம் என்றால், அதை வாழ்வில் முயற்சிப்பது என்பது அதை விட பெரிய போராட்டம். முயற்சித்த மாற்றத்தை வழக்கமாக்கிக்கொள்வது என்பது இன்னும் பெரிய போராட்டம். அதுவும், குடி போன்ற போதைக்கு அடிமையானதில் இருந்து மீண்டு வருவது என்பது தனியொரு மனிதனால் மட்டும் முடிந்து விடக்கூடியதும் இல்லை. நித்தமும் இணையம், பேஸ்புக் என்று சின்ன சின்ன போதைகளிலிருந்து வெளியே வருவது கூட நமக்கு பெரிய போராட்டமாகத்தான் இருக்கிறது. ஒரு மாற்றத்திற்கு தாயாராகியிருந்த சபாபதியை அரவணைத்து கைத்தூக்கிவிட அவருக்கு துணையாக யாரும் இருக்கவில்லை. தந்தையின் மாற்றத்தை உணர்வதற்கும் அவருக்கு உதவுவதற்கும் பிள்ளைகளுக்கு முதிர்ச்சி போதவில்லை. சக மனிதனின் மாற்றத்தை அவதானித்து அவனுக்கு உதவியிருக்க அவனை சூழ்ந்த சமூகத்துக்கும் நேரமில்லை. தன்னந்தனியாக போராட முடியாததால் ஒரு நல்ல மனிதன் தன்னைத்தானே இன்று மாய்த்துக்கொண்டான். இப்படி நல்ல மனிதர்கள் இருப்பது என்பதே அரிது. அவர்களையும் இழக்கும்போது உண்மையில் மனது கொஞ்சம் வலிக்கிறது. இந்த மனிதனை காப்பாற்றியிருக்கலாமோ என்று ஏதோ ஒன்று சொல்லிக்கொண்டே இருக்கிறது.

இரண்டு வாரத்துக்கு முன் உடல்நிலை காரணமாக மருத்துவமனை சென்றுவந்தபின், சபாபதி என் அப்பாவிடம், தன் பிள்ளைகளிடம் தன்னுடைய புகைப்படம் எதுவும் இல்லை அதனால் எடுத்துக்கொடுக்கும்படி கேட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டாராம். இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் இதே நேரத்தில் இன்னும் எத்தனை சபாபதிக்கள் புகைப்படம் எடுக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருப்பார்களோ தெரியவில்லை??!!

4 கருத்துகள்:

  1. Ramesh says:

    நல்ல பதிவு... வறுமை, தனிமை , தாழ்வுமனப்பாண்மை, புறக்கணிப்பு இதில் எதாவது ஒன்று சரிபடுத்தப்பட்டிருந்தாலும் பாபுஜியைக் காப்பாற்றி இருக்கலாம்..

  1. Unknown says:

    நன்றி ரமேஷ். உண்மைதான், இதில் ஏதாவது ஒன்றை நீக்க யாரும் அவருடன் இல்லை!

  1. Vidya says:

    "மாற்றம் என்பது மனதில் வருவது என்பதே ஒரு போராட்டம் என்றால், அதை வாழ்வில் முயற்சிப்பது என்பது அதை விட பெரிய போராட்டம்." - really true