அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சயிண்டிபிக்கா புரூவ் பன்னுனது, அப்படின்னா என்ன?

இடுகையிட்டது: புதன், 5 ஜனவரி, 2011 by Unknown in லேபிள்கள்:
11

....சயிண்டிப்பிக்கா புரூவ் பன்னிருக்காங்க தெரியுமா!!
இப்பல்லாம், அடிக்கடி ஒரு விசயத்த உண்மைன்னு நம்ப வைக்க பயன்படுத்தும் வார்த்தைகள்தான் இவை. இன்னும் சொல்லப்போனா, பல வார இதழ்கள்ள வர துணுக்குகள்ள முக்காள்வாசி இந்த வகையச்சேர்ந்தவைதான். எதைஎடுத்தாலும், "ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சுருக்காங்க", "ஆய்வுபூர்வமா நிரூபிச்சுருக்காங்க" அப்படிங்குற வாசகங்கள் அதிகமா இருக்கும். ஒரு படி மேல போய், "அமேரிக்க விஞ்ஞானிகள், ஜப்பான் விஞ்ஞானிகள்  கண்டுபிடித்திருக்கிறார்கள்" அப்படின்னு கூட போடறதுண்டு. இதுல என்னன்னா, நம்ப ஊரு விஞ்ஞானின்னா நம்பமாட்டோம்ல...! 

ஆனா, உண்மை என்னனா, இந்த துணுக்குகள்ள பாதிக்குப்பாதி அல்லது, அதுக்கு மேலயே உண்மையான செய்திகள தாங்கி வரதில்லை. இது ஒரு வருத்தப்படவேண்டிய, கவணிக்கவேண்டிய ஒரு விசயம். இந்த துணுக்குகள் மூலமா பொது அறிவை வளர்த்துக்கறதில பெரும்பாண்மையானவர்கள், அதிகம் படிக்காத வீட்டில் இருக்கும் பெண்கள். வேலைக்கு போகாமல் இணையம் போன்ற வசதிகள் இல்லாத நிலையில் இருக்கும் படித்த சில பெண்களின் நிலையும் இதுதான். பெண்களின் மூலை மழுங்கடிக்கப்படுவது நல்லதில்லை அப்படீங்கறது என்னோட வாதம். எதிர் வாதம் ஏதும் இருந்தா, தயவு சென்சு டாக்டர். ஷாலினிய படிங்க, புரியும். 

பத்திரிகைகளில் இருந்து வருகிற இந்தவகை உண்மையற்ற செய்திகள் ஒரு புறமிருக்க, இன்றைக்கு அறிவியலோடு சேர்த்து ஆண்மீகம் பேசும் காவி முகமூடிக்கூட்டத்தோட மந்திர வார்த்தைகளும் இதுதான். 'மெட்டா பிசிகல் கான்செப்ட்', 'காசுமிக் எனர்ஜி'... இதெல்லாம் இவங்க பயன்படுதுற சில டெக்கினிக்கல் டெர்மினாலஜிகள்! இத நாங்க சும்மா சொல்லல, 'சயண்டிபிக்கா புரூவ் ஆயிருக்கு' அப்படின்னு சொல்லி, படிச்ச இளைஞர்கல நல்லா மூலை சலவை செய்யராங்க. 

பெரும்பாலும் ஓரளவு படித்த மற்றும் சமூக பொருப்புள்ள இளைஞர்கள்,  எந்த ஒரு விசயத்த எடுத்தாலும் யோசிச்சு, புரிஞ்சு செயல்படனும்னு நினைக்கிற புத்திசாலிகளாவே இருக்காங்க. ஆனா, நம்ம சமூகத்தில ஒரு ஆரோக்கியமான அறிவியல் புரச்சூழல் இல்லாத காரணத்தால அவங்களோட இந்த புத்திசாலித்தனமே அவர்களோட பலவீனமாவும் போயுடுது. இந்த மாதிரி இளைஞர்களை ரொம்ப அழகா இந்த மார்டன் சாமியார்கள் தங்கள் பக்கம் இழுத்துக்கறாங்க. தியானம், யோகாசனம் மாதிரியான மூளை மற்றும் உடலுக்கான பயிர்ச்சிகள்தான் இந்த ஹைடெக் குருக்களோட தூண்டில். தியானமோ, யோகாசனமோ இவையெல்லாம்மனதையும், உடலையும் சீராக்குகிற பயிர்ச்சி அப்படீங்கற வட்டத்த தாண்டி மூடநம்பிக்கை அப்படீங்கற வலையத்துக்குள்ள போய் சிக்கிக்கும்போதுதான் பிரச்சினை. 

என்னோட சொந்த அனுபவத்திலேயே பல உதாரணங்கள நான் பாத்துருக்கேன், பாத்துட்டும் இருக்கேன். இந்தமாதிரி போகிறவர்கள் பெரும்பாலும் ஒரு மாயமான, கற்பணை உலகத்துல வாழ ஆரம்பிச்சுடறாங்க. அதுக்கப்பரம், 'மஞ்ச கண்ணாடி' மாட்டின கததான். எதப்பாத்தாலும் மஞ்சல்தான். கொஞ்ச நாள் முன்னாடி இப்படி ஒரு நண்பர்கிட்ட பேசிக்கிட்டிருந்தப்போ, அவர் சொன்னார், நம்ப உடம்ப சுத்தி ஒரு மெல்லிய கண்ணுக்கு தெரியாடத லேயர் இருக்கும் விடுதலை (நான் தான்),  அதுதான் நம்ம நிரைய ஆபத்துகள்லேந்து காப்பாத்தும். அதை ஆரோக்கியமா வெச்சிக்கவேண்டியது ரொம்ப முக்கியம். தியானத்தின் மூலமா இது முடியும்னாரு. என்ன பேசரீங்க நட்பு (பேர் சொல்ல விரும்பல :(), இதெப்படி சாத்தியம் யார் சொன்னா இத உங்களுக்குன்னு கேட்டேன். எங்க தியான வகுப்புல சொன்னாங்க, நீங்கதான் பயாலஜிஸ்ட் (உயிரியல் நிபுனன்) ஆச்சே, இத பத்தி உங்களுக்கு தெரியாதா அப்படின்னு கேட்டாரு. இல்ல நட்பு அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது அப்படின்னேன். அவரும் விடாம, நம்ம தோளுக்கு மேல ஒன்னுமே இல்லயா, நல்லா யோசிச்சு பாத்து சொல்லுங்க அப்படின்னாரு. எனக்கு தெரிஞ்சு, நம்ம தோள்ல பல கோடிகணக்கான பாக்டீரியாக்கள்தான் வாழ்ந்துகிட்டிருக்குன்னு சொன்னேன். உடனே, 'அதான், அதேதான்; அததான் நாங்க சொல்றோம்'. 'இல்ல நட்பு, அது வெற, தவிர அதுக்காக நீங்க எதுவும் செய்யவேண்டாம், அது மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா விலங்குகளுக்கும் உண்டு; அதுக்கும் நீங்க தியானம் செய்யரதுக்கும் சுத்தமா சம்பந்தமே கிடையாது; தியானம் உங்க மூளை சம்பந்தபட்ட விசயம்', இது நான். அவர் விடுவதாக இல்லை, 'இல்ல விடுதலை, இத "சயின்டிபிக்கா புரூவ் பன்னிருக்காங்க" நம்புங்க'!!!! சரி, சயின்டிபிக்கா புரூவிருக்காங்கன்னா, எந்த சயின்டிபிக் ஜேர்னல்ல (ஆய்வுக்குறிப்புகள், ஆய்வுக்கட்டுரைகள் பதிப்பிக்கப்படும் ஆய்விதழ்கள்) பப்லிஷ் பன்னிருக்காங்கன்னு கேட்டேன். 'புரியல விடுதலை' அப்படீன்னார். 

அதுதாங்க விசயம், 'அறிவியல் நிரூபனம்' அப்படீன்னா என்னனே தெரியாமலேயே இத சொல்லி திருஞ்சுகிட்டிருக்காங்க நம்ப ஆளுங்க. உலகத்துல எந்த மூலையில் ஒரு ஆய்வு நடந்தாலும், அதோட முடிவுகள சர்வதேச  ஆய்விதழ்கள்ள (Scientific journals) பதிப்பிக்கப்பட்ட பிறகுதான் அதை நிரூபனமாகக் கொள்ள முடியும். இந்த ஆய்விதழ்களுக்குன்னு பல ஆராய்ச்சியாளர்களைக்கொண்ட ஆசிரியர் குழு இருக்கும். அவங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக்குறிப்புகள், அல்லது கட்டுரைகள்ள சொல்லப்படிருக்குற அறிவியல் சோதனைகள், அந்த சோதனைகளுக்கு அந்த ஆராய்ச்சியாளர்கள் கையாண்ட முறைகள் இவைஎல்லாத்தையும் ஆசிரியர் குழு பரிசீலிக்கும். அந்த பரிசீலனையில் ஏற்படும் சந்தேகங்களை அந்த ஆய்வ மேற்கொண்ட ஆராய்ச்சியாலர்கள் சரியான முறையில் தெளிவு படுத்தினால்தான் அந்த ஆய்வுக்குறிப்போ, கட்டுரையோ ஆய்விதழ்கள்ள வெளியாகும். ஒரு ஆய்வை முழுமையா முடிக்க வருடக்கணக்காகும்னா, முடிச்ச ஆய்வ கட்டுரையா எழுதி, அத பரிசீலனைகளுக்குட்படுத்தி பதிப்பிக்கறதுக்கும் குறைந்தது 3 மாதத்துலேந்து 1 வருடம் வரை ஆகும். Nature, Science, PNAS, Cell...இவையெல்லாம் உலகின் இரு சில சிறந்த ஆய்விதழ்கள். இந்த மாதிரி நூத்துக்கணக்குல இருக்கு. வெவ்வேறு துறைகளுக்கு வெவ்வேறு ஆய்விதழ்கள் உண்டு. 

ஆக,  இதுக்கு பேருதான் 'சயின்டிபிக்கா புரூவ் பன்றது'. இனிமே யாராவது 'சயின்டிபிக்கா....ன்னு சொன்னாலே, எந்த ஜேர்னல்ல (Journal) அப்படீன்னு கேளுங்க... (ஆ)சாமியோ, காவியோ, சாயம் எல்லாம் வெளுத்துரும்! 

இதப்பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு கீழ 2 வரி சொல்லிட்டு போங்க!! _/\_

நான், நீ, நாம்- இது பாக்டீரியா மொழி

இடுகையிட்டது: வியாழன், 14 அக்டோபர், 2010 by Unknown in லேபிள்கள்:
4

பாக்டீரியாக்கள் பேசிக்கொள்ள ஒரு மொழி உண்டு என்று சொன்னால், எத்தனை பேர் நம்புவார்கள்? ஆனால், உண்மையில் அவைகளுக்கென்று ஒரு தனி மொழி இருக்கிறது, இம்மொழியைக்கொண்டு பேசி கலந்தாலோசித்துவிட்டுத்தான் பல முக்கிய வேலைகளை செய்கின்றன என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. பாக்டீரியாக்களின் அந்த சங்கேத மொழியை பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து அதில் சில வார்த்தைகளை மனிதர்களாகிய நாம் கற்றுக்கொண்டுள்ளோம். நம்பமுடியவில்லையா? ஆம், பாக்டீரியாக்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ள, சில வேதிப்பொருட்களை தயாரித்து அதன் சுற்றுப்புறத்துக்கு அனுப்புகிறது. அப்படி அனுப்பப்பட்ட வேதிப்பொருட்களை உணர்வதன் மூலம் யார் தம் சுற்றத்தார் என்பதை தெரிந்துகொள்கிறது. நுண்ணுயிரிகளின் இந்த திறனை ஆராய்ச்சியாளர்கள்,  'குவாரம் சென்சிங்' (Quorum sensing) என்று சொல்கிறார்கள்.

ஒரு ஒரு-செல்உயிரிக்கு இந்த திறன் எதர்க்கு என்ற கேள்வி எழுகிறது, இல்லையா? ஆனால், இக்குணங்கள் பரினாம வளர்ச்சியில் தத்தம்  இனத்தின் வளர்ச்சிக்காகவும், அனுகூலமற்ற புறச்சூழல்களிலிருந்து காப்பதர்க்காகவும், தீங்குவிளைவிக்கக்கூடிய மற்ற உயிரிகளிடமிருந்து பாதுகாக்கவும், அவற்றை எதிர்க்கவும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டவையாகக் கருதப்படுகிறது.

பாக்டீரியாவை தன்னுள் கொண்ட மெல்லுடலி
'விப்ரியோ பிசுசரி' (vibrio fischeri) என்ற ஒரு கடல் வாழ் பாக்டீரியாவில் இந்த குவாரம் சென்சிங்கை முதன்முதலில் கண்டுபிடித்தவர் 'போணி பேசுலர்' (Bonnie Bassler). இந்த பாக்டீரியாக்கள், பகலில் மணலுக்கு அடியிலும், இரவில் கடல் மேல்பரப்பில் வந்து இரைதேடும்,  ஒரு வகை  மெல்லுடலிகள் வகையைச்சார்ந்த உயிரினத்தின்உடலுக்குள் இருந்து கொண்டு, இரவில் ஒளிரக்கூடிய திறன் கொண்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த பாக்டீரியாக்கள், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை அடைந்தவுடந்தான் ஒளிர்வதர்க்கான புரதத்தை சுரக்கின்றன. அதற்குமுன் இதை செய்வதில்லை. தங்களின் எண்ணிக்கையை குவாரம் சென்சிங்கின் மூலமாகத்தான் அறிந்துகொள்கின்றன என்று பேசுலர் கண்டரிந்தார்.

ஆட்டோ இன்டியூசர் 
பாக்டீரியாக்களின் இந்த வேதிச்சொற்களை 'ஆட்டோ இன்டியூசர்கள்' (Autoinducer) அல்லது சுருக்கமாக AI என்று சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, பாக்டீரியா எனும் 'தொகுதி'யை (phylum) தனியாகவும், விப்ரியோ (vibrio) என்ற 'பேரின'த்தை (genus) தனியாகவும், பிச்சரி (fischeri) என்ற 'இன'த்தை (species) தனியாகவும் பிரித்துப்பார்ப்பதற்காக, மூன்று வகை வேதி-வார்த்தைகளை இவை உபயோகிக்கின்றன. அதாவது, தன்னுடைய ஒரே இனத்தை 'நான்'(AI-1) என்றும், தம் பேரினத்தை தெரிந்துகொள்ள, 'நீ'(CAI-1) என்றும், மற்றும் மற்ற வகை பாக்டீரியாக்களை தெரிந்துகொள்ள 'நாம்' (AI-2) என்றும் வெவ்வேறு வேதிப்பொருட்களை இவை சுரக்கின்றன.

மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களும், இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. மனித உடலில் நுழைந்த உடன், சிறிய எண்ணிக்கைகளில் இருக்கும்போது, இவை எந்த தீங்கும் செய்யாமல், இனப்பெருக்கம் மட்டுமே செய்துகொண்டிருக்கும். மனித செல்லை தாக்குவதற்கு தேவையான அளவு நச்சு-புரதங்களைச் சுரக்க, போதிய அளவு தங்களின் சகாக்களின் எண்ணிக்கை பெருகிய பிறகு, எல்லோரும் சேர்ந்து ஒரே நேரத்தில் அந்த புரதங்களைச் சுரந்து நமக்கு நோய் விளைவிக்கின்றன. இந்த ஒரு செல் உயிரிகளிடம் இந்த அளவுக்கு ஒழுங்குகள் இருப்பது ஒரு புறம் அதிர்ச்சியாயும் இருக்கிறது. ஆனால், ஒரே ஒரு செல்லை மட்டும் கொண்ட இந்த உயிரிகளே இத்தனை அறிவுடன் செயல்பம்டுபோது, நம்மையெல்லாம் சொல்லவா வேண்டும்.

பாக்டீரியாக்கள் பேசும் அதே வார்த்தைகளைப்போல அமைப்பைக்கொண்ட வேறு வேதிப்பொருள்களை அராய்ச்சியாளர்கள் தயாரித்து, இந்த பாக்டீரியா இருக்கும் இடத்தில் சேர்த்து  சோதித்துப் பார்த்தனர். இதனால், குழப்பமடைந்த பாக்டீரியாக்கள் தங்கள் சகாக்கள் எல்லாம் இல்லை என்று நினைத்து நோய் உண்டாக்காமலே இருந்ததை அவர்கள் கண்டறிந்துள்ளனர். வருங்காலத்தில் மருந்து எதிர்ப்புசக்திகொண்ட நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருப்பதால் (தொடர்புடைய பதிவு), இந்த தொழிற்நுட்பம் பாக்டீரியாக்களினால் ஏற்படும் நோயிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பயன்படும் என்று நம்பப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய, நிகழ்த்திக்கொண்டிருக்கிற அறிஞர்களுக்கும், இன்னும்  அறிவியலின் உச்சங்களை தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆராச்சியாலர்கள், அவர்களின் மாணவர்கள் என்று அனைவருக்கும் நம் பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்வோம்!

பி.கு.: அட இது பரவாயில்லை, பாக்டீரியாக்கள் எழுந்து நின்று நடந்து செல்வதைக்கூட நம்ப படமா எடுத்து வெச்சுருக்கோம் தெரியுமா (இணைப்பு)??

என்.டி.எம்-1, யார் தவறு…?

இடுகையிட்டது: வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010 by Unknown in லேபிள்கள்:
2

என்.டி.எம்-1 (NDM-1) இதுதான் இன்று உலகம் முழுதும் செய்தி ஊடகங்களின் முதற்பக்கங்களை அலங்கரித்துக்கொண்டிருக்கும் பெயர். ஆங்கிலத்தில் New Delhi Metallo-1 என்பதன் சுருக்கம் தான் இந்த என்.டி.எம்-1. இது ஒரு புரதம். இந்த புரதத்தை தயாரிக்கக்கூடிய மரபணுவைக்கொண்ட பாக்டீரியாக்கள், நாம் பயன்படுத்தும் நுண்ணுயிர்கொல்லிகள் பலவற்றிலிருந்து அவற்றைக் காப்பாற்றும் ஆற்றல் கொண்டது, முக்கியமாக பீட்டா லாக்டம்கள் (beta lactum) என்ற வகையைச்சார்ந்த மருந்துகளை (எ.கா. பென்சிலீன்) செயலிழக்கச்செய்யும் தன்மையைக்கொண்டவை. இவ்வகை ஜீன்களை எம்.பி.எல் (MBL)அல்லது (Metallo Beta Lactamase) என்று அழைப்பார்கள். இந்த புதிய எம்.பி.எல் நாம் முன்னமே அறிந்திருக்கும் எம்.பி.எல் களை விட வேறுபட்டவையாக இருக்கின்றன. இதை சிலர் ‘சூப்பர் பக்’ (super bug), அதாவது மிகையான ஒரு உயிர் என்று அழைக்கின்றனர். இதற்கு மும் எம்.ஆர்.எஸ்.ஏ (MRSA – Methecilin Resistant Staphylococcus Aureus) என்ற பாக்டீரியாவை சூப்பர் பக் என்று அழைத்தனர். ஆனால், இந்த மரபணுக்கு அல்லது புரதத்துக்கு இந்த பெயர் ஏற்புடையதல்ல. இதனால் ஒரு பாக்டீரியாவை சூப்பர் பக்-காக ஆக்கமுடியல்லாம் ஆனால், இதுவே ஒரு சூப்பர் பக் அல்ல என்பது என் வாதம்.
articleமேலும், ஊடகங்கள் ‘கிட்டத்தட்ட அனைத்து (most)’ மருந்துகளையும் எதிர்க்கக்கூடியது என்று சொல்கிறார்கள். அந்த ‘கிட்டத்தட்ட அனைத்து’ என்பதன் விளக்கமென்ன? எவை எல்லாம் இதில் அடங்கும்? ஏனென்றால், இந்த என்.டி.எம்-1 ஐ முதலில் அறிமுகப்படுத்திய ஆய்வுக்கட்டுறை இவை புளூரோகியூனளோன்கள் மற்றும் கோளிஸ்டின் (fluoroquinolones and colistin) வகை மருந்துகளுக்கு கட்டுப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். என்.டி.எம்-1 வகை எம்.பி.எல் கள் முதன்முதலில் ஜப்பான் நாட்டில் 1991ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இவை பெரும்பாலும் இண்டகிராண்கள் (integrons) என்று சொல்லக்கூடிய மரபணுக்களுடன் சேர்ந்து காணப்படுபவை. இண்டகிராண்கள் அதனுடன் இருக்கும் ஜீன்களை வேறு உயிரிக்கு தானாக எடுத்துச்செல்லும் குணம் கொண்டவை. இவை பாக்டீரியாக்களில் மருந்து எதிர்ப்பு சக்தியை பரப்புவதில் பெரும்பாலும் அறியப்படுபவை. நமக்கு முன்னமே தெரிந்த பழைய எம்.பி.எல் கள் எப்படி, எங்கே தோண்றின என்ற ஆராய்ச்சி இப்போது நமக்கு வேண்டாம், ஆனால் இந்த என்.டி.எம்-1 எனும் புதிய வகை எம்.பி.எல் இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக, பிரித்தானிய அரசு தமது மக்களை இந்தியாவிற்கு மருத்துவத்திற்காக செல்ல வேண்டாம் என்று அறிவுறித்தியுள்ளது. மருத்துவ சுற்றுலா என்பது இந்தியா பொருத்தவரை, உலகில் மிகவும் பிரபலமான ஒன்று. இதனால் கிட்டத்தட்ட அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1200 கோடி ரூபாய்கள் வருமானம் வருகிறது. இந்திய அரசு, பிரித்தானிய அரசின் இத்தகைய செயலுக்கு கடும் அதிர்ப்தி தெரிவித்துள்ளது. இன்றைய தேதிக்கு, பல நூறு பாக்டீரியாக்கள் மற்றும் ஜீன்கள் மருந்தெரிப்பு கொண்டவைகளாக இருக்கின்றன. அவை வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு சூழல் மற்றும் மனித நடவடிக்கை  காரணங்களால், இயற்கையால் உருவாக்கப்படுகின்றன. ஆனால், ஒவ்வொருமுறை இந்த பாக்டீரியாக்களோ, ஜீன்களோ கண்டுபிடிக்கப்பட்டபோது, இதுபோலவே அந்நாட்டிற்கு செல்லவேண்டாமென்று ஏதேனும் அரசுகள் நாட்டு மக்களை அறிவுறித்தியதா என்று கேட்டால், அப்படி ஒரு செய்தி இதுவரை இல்லை. ஏன், எம்.ஆர்.எஸ்.ஏ என்றழைக்கப்படும் பல மருந்தெதிர்ப்பு சக்தி வாய்ந்த பாக்டீரியா பிரித்தானியாவில் முதன்முதலில் 1961ல் கண்டுபிடிக்கப்பட்டபோது இப்படி ஒரு நிலை ஏற்பட்டதா? பின் 1981 ஆண்டு இதே வகை அமேரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்று உலகம் முழுதும் இந்த வகை பாக்டீரியாக்கள் இருக்கின்றன.  இதை பிரித்தானியாவில் உருவாகி பின் மற்ற நாடுகளுக்கு பரப்பப்பட்டது என்று சொன்னால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு சங்கடம், ஊடகங்கள். எப்போதும் போல இந்த செய்தியையும் ஊதி பெரிதாக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு செய்தி ஊடகம் ஒருபடி தாண்டிப்போய், “இதனால் அங்கங்கள் செயலிழந்து உயிரிழப்பு ஏற்படலாம்” என்று பிரச்சாரம் செய்கிறது. மக்களின் அறியாமையை பயன்படுத்தி இவர்கள் லாபம் பார்க்கிறார்கள். சமுதாயத்தில் செய்தி ஊடகள்களின் பணி அளப்பறியது, ஆனால் இன்று இந்தத்துறை சோரம்போய் விட்டது ஒரு கசப்பான உண்மை.
கடைசியாக, இப்போது இந்திய அரசாங்கமும், ஊடகங்களும், என்.டி.எம்-1 ஐ கண்டுபிடித்தவர்களை தூற்றவும், பழிபோடவும் ஆரம்பித்திருக்கிறார்கள். இது தொடர்பாக முதன்முதலில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரையைப் படிக்கும்போது, இதற்கு இந்தியாவை சம்பந்தப்படுத்திப் பெயர் வைத்திருப்பது ஒரு தவறாகத்தோண்றவில்லை. ஏனெனில், ஒரு புதிய ஜீனை கண்டுபிக்கும்போது, அதைக் கண்டெடுத்த இடத்தின் பெயரை சூட்டுவது வழமைதான். ஆனால், இது ஒரு திட்டமிட்ட சதி என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. மேலும், இந்த ஆராய்ச்சிக்கு பொருளுதவி செய்வது ஒரு மருந்து தாயாரிக்கும் நிறுவனம் என்பதால் அந்த நிறுவனத்தின் நலனுக்காக புணையப்பட்ட செய்தி இதுவென வாதாடுகிறார்கள்.
எது எப்படியோ, இப்போது செய்யவேண்டியதெல்லாம், இந்த வகை எதிர்ப்புசக்தி மற்ற பாக்டீரியாக்களுக்கு பரவாமல் தடுப்பதையும், அதற்கான மாற்று மருந்துகள் கண்டுபிடிக்கவும் வேண்டிய வழிமுறைகளை அறிவியல் பூர்வமாக ஆராய்வதே. அதை விட்டுவிட்டு, தொழிற்போட்டியோ அரசியலோ அறிவியலில் தலையிடுமானால், பாக்டீரியாவிற்கும் மனிதனுக்கும் நடக்கும் இந்த தொழிற்நுட்ப போரில் தோற்கப்போவது மனிதன் மட்டுமே. 

செயற்கை உயிர், அறிவியல் தொழிற்நுட்பத்தில் ஒரு மைல்கல்

இடுகையிட்டது: சனி, 22 மே, 2010 by Unknown in லேபிள்கள்:
6

அமேரிக்காவை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் இணைந்து செயற்கையாக தயாரிக்கப்பட்ட மரபணுவைக்கொண்டு (DNA) முதன்முதலில் ஒரு உயிரியை உண்டாக்கி இயங்கவைத்திருக்கிறார்கள்.  கணினி மென்பொருளின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட மரபணுவை வேதிப்பொருட்களின் உதவியுடன் ஆய்வகத்தில் தயாரித்து, 'மைக்கோபிலாசுமா மைக்கோய்டீசு' என்ற பாக்டீரியாவை முழுமையாக இயங்கவும், உயிர்வாழவும் மற்றும் இனப்பெருக்கம் செய்யவைத்து வெற்றியடைந்துள்ளனர். இதுவரை, சிறு சிறு ஜீன்களை பாக்டீரியாக்களில் செலுத்தி தேவையான புரதங்களை தயாரித்துக்கொண்டிருந்தோம். இப்போது, முழுமையாக ஒரு பாக்டீரியாவை செயற்கையான முறையில் உயிர் வாழ மற்றும் இனப்பெருக்கம் செய்யத் தேவையான ஜீன்களை வரிசைப்படுத்தி அதை தயாரித்து அதற்கேற்றார்போல இயங்கவும் வைத்திருக்கிறோம்.  இதன்மூலம், எரிபொருள், மருந்துகள், கழிவுகளை அகற்றும் பணிகள், காற்றை சுத்தப்படுத்துதல், கரியமிலவாயுவை அகற்றுதல்  போன்ற பல வேலைகளை செய்யும் செயற்கை உயிரிகளை நம்மால் உருவாக்க முடியும்.

இந்த சாதனையின் மூலம் பல நன்மைகள் இருந்தாலும், இரண்டுபக்கமும் கூர்மையான கத்தியைப்போன்று அபாயகரமானதும் கூட. இதை ஆயுதங்களாகவும், அழிவு வேலைகள் செய்யக்கூடிய உயிரினங்களாகவும் பயன்படுத்த முடியும். அப்படி ஏதேனும் நடந்தால் அது மனித இனத்தின் அழிவின் ஆரம்பமாக முடிந்துவிடும். மனித இனத்தின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும்வரை இந்த வெற்றி மதிப்புடையதாய் இடுக்கும். 

'சயின்ஸ்' (Science) என்ற உலகப்புகழ்பெற்ற ஒரு ஆய்விதழில் இந்த பணியை பதிவுசெய்துள்ளனர் (http://www.sciencemag.org/cgi/content/abstract/science.1190719) இதை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள். அறிவியலின் அலவுகோள்களை மாற்றியமைத்த இந்த மனிதர்களுக்கு எம் மானசீக வணக்கங்கள்.